சங்கீதம் 119 :105.

ஒரு தகப்பனும் , மகனும் பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வரும் வழியில் அவர்கள் வந்த வண்டி பழுதாகிவிட்டது. அங்கிருந்து அவர்களுடைய ஊர் ஓரளவிற்கு நடந்து போய்விடும் தூரந்தான்.
இருள் கவ்வத் தொடங்கி விட்டது. வண்டி வேலை முடியக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.
வழியில் தெருவிளக்குகளும் எரியவில்லை.
எனவே மெக்கானிக் அவர்களிடம் ஒரு டார்ச் லைட்டைக் கொடுத்து அவர்களை ஊருக்குப் போய் விட்டு மறுநாளில் வந்து வண்டியை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். 
அவர்களும் புறப்பட்டனர்.
             எப்படி நடந்து போனாலும் அவர்கள் வீடு போய்ச் சேர இரண்டு மணி நேரமாகும். அன்றைக்கென்று பார்த்து இருட்டு அதிகமாக இருந்தது.
மகன், தந்தையிடம் கேட்டான் ,
" அப்பா இந்த இருளைப் பார்த்தா பயமாயில்லைப்பா ?"
      
அப்பா சொன்னார் ,
"நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்" னு சொல்லு . பயமெல்லாம் போயிடும்.
மீண்டும் மகன் கேட்டான் ,
"ஏம்பா , வழியெல்லாம் இத்தனை கல்லாக் கிடக்கே ? எங்கேயாச்சும் தடுக்கி விழுந்திட்டா ?"
         அப்பா சொன்னார் ,
" உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்" ங்கற வசனத்தை நினைச்சுக் கிட்டா அந்த பயமும் வராது" .
           மீண்டும் மகன் கேட்டான் ,
" இதெல்லாம் சரி . வழியில் ஏதாச்சும் ஆபத்தான மிருகமோ, விஷ ஜந்துக்களோ வந்தா ?".
          அப்பா புன்னகையுடன் அதற்கும் பதில் சொன்னார் ,
"சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் " என்றும் வசனம் இருக்குதே" அதை நம்பினா போதுமே ".
                எந்தக் கேள்வி கேட்டாலும் அப்பா , வசனத்திலிருந்தே பதில் சொல்வார் என்பது மகனுக்கு நன்றாகவே தெரியும் . இருந்தாலும் அப்பாவின் விசுவாசத்தைப் பார்ப்பதில் மகனுக்கு ஒரு சந்தோஷம்.
இப்போது மகன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான்.
" சரிப்பா, இன்னும் கொஞ்ச நேரத்தில நாம வீட்டை நெருங்கிடுவோம், இந்த சின்னப் பயணத்துக்கு வசனம் ஆறுதல் கொடுக்குது.
ஆனா வாழ்க்கைப் பயணம் பெருசாச்சே ? அது முழுசையும் இந்தச் சின்னச் சின்ன வசனங்களைக் கொண்டே கடந்து போயிட முடியுமா?"
               அப்பா ஒன்றும் சொல்லாமல்  டார்ச்சை அவன் கையில் கொடுத்தார் .
"இந்த டார்ச் வெளிச்சத்தை நம் வீடு வரைக்கும் தெரியிற மாதிரி காட்டேன். நாம ஈசியா நடந்து போயிடலாம்" என்றார். மகன் சிரித்தான்.
          "அப்பா , இது டார்ச்சுப்பா. இதால அதிக பட்சமா பத்தடி தூரத்துக்குத்தான் வெளிச்சம் காட்ட முடியும் " என்றான்.
              அப்பா உடனே சொன்னார் ,
" வெறும் பத்தடி தூரத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டுற டார்ச்சை வச்சுகிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி வந்துட்டோம். இன்னும் போகப் போறோம்.
இது நம்ம வீடு வரைக்கும் தெரியிற அளவுக்கு வெளிச்சம் தரலைன்னாலும் , அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமா வழிகாட்டி நம்ம வீடு வரைக்கும் கொண்டு போய்விட்டிடும் .
இதைவிட ஜீவனுள்ள வசனம் மேலானது இல்லையா? .
ஒவ்வொரு கட்டத்துக்கும் ஆவியானவர் கொடுக்கும் ஒவ்வொரு வசனத்தைப் பிடிச்சுக்கிட்டே நடந்து பார். வாழ்க்கைப் பயணத்தை ஈசியாக் கடந்துடலாம்" .
            "உண்மைதாம்ப்பா. உங்களை மாதிரியே நானும் இனி அதிகமா வேதத்தைப் படிச்சு வாழ்க்கையோட எல்லாக் கட்டத்தையும் எளிதா கடந்து போவேன்" என்று சொல்லி மகன் அப்பாவின் கரத்தை முத்தமிட்டான்.
*** வசனமே நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டியாய் வருவது.
அதுவே நம் கால்களுக்குத் தீபமும்,  பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119 :105.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*