நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு
*நாம் பெற்ற மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா?*
*நாம் பெற்றிருக்கிற பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? நிபந்தனையற்றதா?*
ஆண்டவராகிய இயேசு நமக்காய் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு பாவ மன்னிப்பை அருளி நம்மை இரட்சிக்கிறார். *“குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது”* (கொலோ 1:14). *“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது”* (எபே. 1:7).
இந்த பாவமன்னிப்பு அவருடைய இரத்தத்தினாலே உண்டாகின்றபடியினாலே, அந்த பாவ மன்னிப்பிற்காக நாம் செய்ய வேண்டிய பிராயசித்தம் ஒன்றுமில்லை. *இலவசமாய் கிருபையாலே, அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும் பாவமன்னிப்பை கொடுத்து இரட்சிப்பை அருளுகிறார்.*
_*ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதே!*_
மத்தேயு 18ம் அதிகாரத்தில் இதை விளக்கும்படி இயேசு ஒரு உவமையை கூறியுள்ளார். இந்த உவமையை நம்முடைய நடைமுறையில் சற்று விளக்கமாக பார்ப்போம். ஒரு பெரிய ராஜாவிடம், *பீட்டர் என்பவன் 10000 தாலந்து கடன்பட்டுள்ளான்.*
ஒரு தாலந்து என்பது 6000 தினாரி. ஒரு தினாரி என்பது ஒரு நாள் வேலைக்கான கூலி. நமது இன்றைய மதிப்பில் ஒரு நாள் கூலி 500 ரூபாய் என்று வைத்து கொள்வோம், அப்போ, ஒரு தினாரி 500 ரூபாய். 6000 தினாரி (ஒரு தாலந்து) என்பது 30 லட்சம் ரூபாய். *ஒரு தாலந்து 30 லட்சமென்றால் 10000 தாலந்து? 30000000000 ரூபாய். (மூவாயிரம் கோடி ரூபாய்.)*
இந்த 3000 கோடி கடன்பட்ட பீட்டர், ராஜாவிடம் வந்து, தன்மேல் பொறுமையாயிருக்கும்படி கெஞ்சினான். ராஜா அவன் மேல் இரக்கப்பட்டு, பீட்டரை முழுவதுமாய் மன்னித்தார். *3000 கோடி கடன் ஒரு நிமிடத்தில் மன்னிக்கப்பட்டது.*
தன் கடன் முழுவதும் மன்னிக்கப்பட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக்கொண்டு சென்றான் பீட்டர். அவனுக்கு எதிரில் ஆன்ட்ரூ வந்தான். *ஆன்ட்ரூ பீட்டரிடம் 50000 ரூபாய் கடன் வாங்கியிருக்கின்றான்.* அதை நினைவுகூர்ந்த பீட்டர் ஆன்ட்ரூவின் கழுத்தை பிடித்து நெரித்து மிரட்டினான். *ஆன்ட்ரூ கெஞ்சின போதும் அவனை விடவில்லை.* மேலும், ஆன்ட்ரூ தன் 50000 ரூபாயை ஏமாற்றிவிட்டதாக கூறி, அவனை போலீஸில் ஒப்படைத்தான்.
பீட்டர், *தனக்கு 3000 கோடி மன்னிக்கப்பட்டிருக்கும் போதும், தான் ஆன்ட்ரூவின் 50000 ரூபாயை மன்னிக்க மனம் இல்லாமல் நடந்து கொண்டவிதம்* ராஜாவுக்கு தெரியவந்தது. ராஜா கடும் கோபம் கொண்டு, பீட்டரை திரும்ப பிடித்து வரச்செய்தான். பின்னர் தான் அளித்த *மன்னிப்பை ரத்து செய்து,* அவனை சிறையிலடைத்தான்.
சண்டே கிளாஸ் பிள்ளைகளுக்கு கதை சொல்வது போல் நான் இந்த உவமையை விளக்கி சொல்வதின் நோக்கம் என்ன தெரியுமா? *இதையெல்லாம், பல முறை வாசித்தும், நன்கு அறிந்திருந்தும், நம்மில் பலர் நமக்கு விரோதமாய் தவறுசெய்கிறவர்களை மன்னிப்பதே கிடையாது.*
*கர்த்தர் நம்முடைய 30000000000 தவறுகளை ஒரு நொடியில் மன்னித்து விட்டார். நாம் வெறும் 50000 தவறுகளை மற்றவர்களுக்கு மன்னிக்க மறுத்து, கசப்புகளையும், வைராக்கியங்களையும் நம் மனதில் வைத்துக் கொண்டு வாழ்கின்றோம்.*
இதில் ஆபத்து என்னவென்றால், *நாம் மற்றவர்களை மன்னிக்க மறுக்கும் போது, நாம் தேவனிடத்தில் பெற்ற 3000 கோடி மன்னிப்பு ஆட்டோமேடிக்காக கேன்சல் ஆகிவிடுகின்றது.*
*தேவன் நம்மை மன்னித்த மன்னிப்பு, நிபந்தனையுள்ளதுதான். அது என்ன நிபந்தனை?*
*நாம் மன்னித்தால், நமக்கும் மன்னிப்பு. நாம் மன்னிக்க மறுத்தால் நமக்கும் மன்னிப்பு இல்லை.* ஆம் வேதம் இதைத்தான் சொல்கின்றது:
*“நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்”* (மத். 18:35).
*“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்”* (மத் 6:12) என்று ஜெபிக்க கற்றுக் கொடுத்தார் இயேசு.
*“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பரம பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்”* (மத் 6:14,15)
*“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”* (கொலோ. 3:13)
நாம் எத்தனை பேரை மன்னிக்காமல், அவர்களை குறித்த கசப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? கொலை, திருட்டு, விபச்சாரம், வேசித்தனத்தை பெரிய பாவமாக நினைத்து அதை விட்டு விலகி வாழ்கின்றோம். அது சரிதான். ஆனால் *மன்னியாமை என்பது அதை விட கொடிய பாவம் என்பதை தான் இயேசு இந்த உவமையில் விளக்கியுள்ளாரே! மன்னியாமை என்ற பாவம் நம்முடைய இரட்சிப்பையே கேன்சல் செய்யும் வல்லமையுள்ளது.*
எச்சரிக்கையோடு, *நமக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களை இன்றே மன்னித்து மறந்து விடுங்கள்.* விரோதங்களை வளர்க்க வேண்டாம். வைராக்கியங்களை காக்க வேண்டாம். *மூவாயிரம் கோடி கடனுக்கு மன்னிப்ப கடவுள் கிட்ட வாங்கிட்டோம், ஒரு ஐம்பதாயிரத்துக்காக ஏன் மற்றவர்களை விரட்டி விரட்டி பிடிக்கனும்? விட்ருவோமே!*
*மாரநாதா! கர்த்தர் சீக்கிரம் வருகின்றார்!*
சகோதரன் ஆல்வின் ஜான்சன்
Comments
Post a Comment