தவக்காலத்தில் நான் எதைக் கைவிடவேண்டும்?
இந்தத் தவக்காலத்தில் நான் எதைக் கைவிடவேண்டும்?
அசைவம்? சாக்லேட்? ஐஸ்கிரீம்? குளிர்பானங்கள்?
பொதுவாக தவக்காலத்தில் நம்மில் பலரும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று கருதி, நமக்கு மிகவும் பிடித்ததைக் கைவிட நினைப்பதுண்டு. நிச்சயமாக இது பெரிய காரியம்! தவக்காலத்தில் உபவாசம் இருப்பதென்பது மிகவும் சிறந்தது. எனினும், இந்த வருடம் நாம் கைவிடக்கூடிய மற்ற காரியங்களையும் பார்ப்போம்.
1. குறை கூறுவதை விட்டுவிட்டு, நன்றி சொல்வதில் கவனம் செலுத்துவோம்.
“எல்லாவற்றையும் குற்றம் காணாமலும், வாதிக்காமலும் செய்யுங்கள். அப்போது குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருபீர்கள்..... (பிலிப்.2:14-15).
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1தெச.5:18).
2. காழ்ப்புணர்வை விட்டுவிட்டு, மன்னிக்கும்படி மனந்திரும்புவோம்.
“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. (எபே.4:31).
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபே.4:32).
3. கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேவனை விசுவாசிப்போம்.
“ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” (மத்.6:25).
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33).
4. மனச்சோர்வை விட்டுவிட்டு, நம்பிக்கையில் நிறைந்திருப்போம்.
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். (உபா.31:8).
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:31).
5. வெறுப்பை விட்டுவிட்டு, தீமைக்கு நன்மை செய்யும்படி திரும்புவோம்.
“ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்” (1யோவான் 2:9).
“எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்” (லூக்.6:27).
6. கோபத்தை விட்டுவிட்டு, மிகுந்த பொறுமையோடிருப்போம்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;” (மத்.5:22).
“கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்” (நீதி.15:18).
7. வீண்வம்பை விட்டுவிட்டு, நாவைக் கட்டுப்படுத்துவோம்.
“உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்” (சங்.34:13).
“தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்” (நீதி.21:23).
Comments
Post a Comment