சாட்சி

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் கூறுகிறார்...

தேவனை அறியாமல் பாவியாக அலைந்து திரிந்த என்னையும் தேடி வந்த இயேசு, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இரட்சித்தார். இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து கேட்ட வேத வசனங்களுக்கு கீழ்படிந்து வாழ உதவி செய்தார்.

இந்நிலையில் என் வாழ்க்கையில் தேவன் செய்த மறக்க முடியாத ஒரு அற்புதத்தை, இங்கு சாட்சியாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள கோலார் தங்க வயல் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், அதில் நானும் பணியாற்றி வந்தேன். அந்தக் காலத்தில் தான் இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன்.

அதன்பிறகு என்னிடம் இருந்த கெட்டப் பழக்கங்களை ஒவ்வொன்றாக விட்டுவிட தேவன் உதவி செய்தார். என்னோடு பணியாற்றியவர்களுக்கு எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றங்களைத் துவக்கத்தில் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களோடு பேசுவது மற்றும் பழகுவதில் ஏற்பட்ட மாற்றங்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் பல கேள்விகளுக்கும் நான் மெளனம் சாதித்து வந்தேன். இதனால் பிற்காலத்தில் என்னை கேலி, கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

கோலார் தங்கவயல் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள தங்கம் கலந்த கற்களை வெட்டி எடுத்து, வண்டியில் வைத்து மேலே எடுத்து வரும் பணியில் ஈடுபட்ட குழுவில் நான் பணியாற்றி வந்தேன். இதனால் காலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு குழுவாக, விளக்குகளுடன் சுரங்கப் பாதையில் நடந்து செல்வோம்.

மதிய உணவு, குடிநீர் என்று ஒரு நாளுக்கு தேவையான எல்லாவற்றையும், எங்களோடு எடுத்து செல்வது வழக்கம். மதிய உணவிற்கு செல்லும் போது, ஒரு குழுவாக செல்வோம்.

இந்நிலையில் ஒரு தேவ செய்தியில், நாம் சாப்பிடும் முன் ஜெபித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று கேட்டேன். அந்த காரியம் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே தினமும் ஜெபித்துவிட்டு, சாப்பிட துவங்கினேன்.

வீட்டில் துவக்கிய இந்தப் பழக்கம், பணியிடத்திலும் தொடர்ந்தது. ஏற்கனவே என்னை பணி இடத்தில் கேலி செய்தவர்களுக்கு, இது மேலும் உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது. என்னுடைய சாப்பிட்டு கூடையை திறந்து வைத்த உடனே, நண்பர்களின் கிண்டலும் துவங்கும்.

நான் சாப்பிட்டு முடியும் வரை நண்பர்களின் கிண்டல் தொடரும். இப்படி பல வாரங்கள் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு ஜெபித்துவிட்டு சாப்பிடுவதில் வெட்கம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஜெபத்தை நிறுத்தவில்லை.

ஒருநாள் மதிய சாப்பிட்டிற்கு எல்லாரும் கூட்டமாக சென்றோம். அன்றும் வழக்கம் போல என்னை அதிகமாக கேலி செய்வார்கள் என்ற எண்ணத்தில், தனியாக சற்று ஒதுங்கி உட்கார்ந்து சாப்பிட சென்றேன். ஏனெனில் என்னால் ஜெபிக்காமல் இருக்கவும் முடியவில்லை, அவர்களின் கிண்டல் பேச்சுகளைத் தொடர்ந்து கேட்கவும் முடியவில்லை.

வழக்கம்போல சாப்பாட்டு கவரைத் திறந்து வைத்துவிட்டு, என் கண்களை மூடி, ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் ஜெபிக்கும் போதே, நண்பர்களின் கிண்டல் சத்தம் என் காதைப் பிளந்தது. ஆனாலும் கண்களைத் திறக்காமல், ஜெபத்தை முடித்தேன்.

என் கண்களைத் திறந்து பார்த்த போது, நான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு கவரை எடுத்து கொண்டு ஒரு நாய் ஓடுவதைக் கண்டேன். என்னப்பா ஜெபவீரரே, உங்க சாப்பாட்டை ஒரு நாய் தூக்கிக் கொண்டு போகிறதே! என்று நண்பர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

அவர்களின் பேச்சுகளைக் கேட்டு ஏற்கனவே தொய்வடைந்து இருந்த எனக்கு, சாப்பாட்டு கவரைத் தூக்கிக் கொண்டு ஓடிய நாய் மீது கடும் கோபம் உண்டானது. எனக்கு வந்த கோபத்தில், நாயைத் துரத்திச் சென்று அதன் வாயில் இருக்கும் சாப்பாட்டை பிடுங்கிவிட வேண்டும் என்று தோன்றியது.

நாயை துரத்த ஆரம்பித்தேன். நான் துரத்துவதை அறிந்த நாய், சாப்பாட்டு கவரைக் கவ்விக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தது. நானும் விரைவாக அதன் பின்னே ஓடினேன். எனது செயலைக் கண்ட நண்பர்கள் மேலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பல அடித்தூரம் ஓடிய நாய், சுரங்கத்தை விட்டு வெளியே வரும் பாதையை எட்டிவிட்டது. ஓடிய களைப்பு இருந்தாலும், அந்த நாயைப் பிடித்தே தீருவேன் என்ற முடிவை மட்டும் விடவில்லை. சுரங்கத்தின் வெளி வாசலைக் கடந்த நாய், மேலும் 20 அடித் தூரத்திற்கு ஓடிச் சென்று, அந்த சாப்பாட்டு கவரை போட்டுவிட்டு ஓடிவிட்டது.

நானும் துரத்திச் சென்று, அந்தக் கவரை எடுக்கும் போது, என் பின்னே ஒரு பெரிய இடி முழக்கம் போன்ற சத்தத்தைக் கேட்டேன். பூமியின் அடிப்பகுதிக்கு சாய்வாக செல்லும் வழியைக் கொண்டிருந்த சுரங்கப் பாதைக்கு மேலே இருந்த மண் அப்படியே சரிந்து விழுந்து, அந்தச் சுரங்கமே மூடிவிட்டது.

சுரங்கத்திற்குள் இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அப்படியே மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். நீண்டதூரத்திற்கு மண் சரிந்திருப்பதால், அவ்வளவு தூரத்திற்கு மண்ணைத் தோண்டி மரித்தவர்களின் உடல்களை வெளியே எடுப்பது இயலாத காரியம் என்பதால், அந்த முயற்சியைக் கைவிட்டார்கள்.

அப்போது பணியில் இருந்த நான் மட்டுமே உயிரோடு காக்கப்பட்டேன். சுரங்கத்தில் இருந்த எல்லாரும் ஒன்றாக மரித்துப் போனார்கள். அதன்பிறகு கோலார் தங்கவயல் பகுதியில் தங்கம் எடுக்கும் பணி நிறுத்தப்படும் வரை, நான் பணியாற்றினேன்.

என்னோடு பணியாற்றிய பலரும், இன்று உயிரோடு இல்லை. ஆனால் தேவனுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் அவரைத் தேடிய என்னை, தேவன் பாதுகாத்தார். அவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து என்னை இரட்சித்தார். இன்றும் குடும்பத்தோடு நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

இந்தச் சாட்சியைப் படித்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே, சகோதரியே, நீங்கள் இரட்சிக்கப்பட்டதைப் பார்த்து, உங்களைச் சுற்றிலும் உள்ளவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம். நீங்கள் ஜெபிப்பதைப் பார்த்து சிரிக்கலாம். ஆனால் தேவனோடு உள்ள உறவிற்கு முக்கிய காரணமாக அமையும், ஜெபத்தை மட்டுமே எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள்.

ஏனெனில் ஜெபித்தால் எப்போதும் ஜெயம் உண்டு, அதில் பாதுகாப்பு உண்டு. ஜெபிக்கும் ஒரு தேவ பிள்ளையோடு, தேவனும் அவரது தூதர்களும் இருப்பார்கள் என்பதற்கு நான் சிறந்த ஒரு சாட்சியாக இருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*