யூதாஸ்
யூதாஸ் JUDAS
இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் யூதாசு.
யூதேயாவிலுள்ள காரியோத்து என்னுமிடத்தவன்.
இயேசுவை பகைவர்களிடம் காட்டிக் கொடுத்தவன். இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர்.
மற்றவர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்.
இயேசுவைக் கொல்ல வேண்டுமென மதவாதிகளும், அரசியல் தலைவர்களும் முடிவு செய்து விட்டார்கள்.
முக்கியமான காரணங்கள் இரண்டு.
ஒன்று, இதுவரை வல்லுநர்கள் போதித்து வந்த சிந்தனைகளுக்கு எதிராக இயேசு போதித்தார்.
அன்பை மட்டுமே முன்னிறுத்தினார். இதனால், எளிய மக்கள் எல்லோரும் இயேசுவின் பின்னால் அணி திரண்டனர்.
இரண்டாவது காரணம்– பணம். சட்டத்தின் பெயரைச் சொல்லி ஏழைகளை வஞ்சித்து பணம் பறிப்பவர்களை இயேசு கடுமையாய் எதிர்த்தார்.
ஆலயத்தில் வியாபாரம் கூடாதென்றார்.
இயேசுவின் எளிமையும், ஆளுமையும் மதத்தலைவர்களை சஞ்சலப்படுத்தின. அவரை இரவில் கைது செய்து, விடியும் முன் தண்டனை வாங்கித் தரவேண்டும் என முடிவு செய்தனர்.
‘தன்னைக் கடவுளாக்கிக் கொண்டான்’ என்று கைதுக்கான காரணம் தயாரித்தார்கள்.
இரவில் இயேசுவைக் காட்டிக் கொடுக்க ஒரு நபர் தேவைப்பட்டார்.
அவர் தான் யூதாசு இஸ்காரியோத்து.
யூதாஸ் அடிப்படையில் ஒரு போராளி.
யூதர்கள் ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருப்பதை அவன் விரும்ப வில்லை.
இயேசுவை யூதர்களின் அரசராக்க விரும்பினான்.
இயேசுவோ, ‘எனது அரசு இவ்வுலகைச் சார்ந்ததல்ல’ என தெளிவாய்ச் சொன்னார்.
அந்த இரவு இயேசு செபித்துக் கொண்டிருக்கிறார்.
யூதாசு பகைவர்களை வழிநடத்தி வந்தான். பின்
னால் பகைவர்கள் ஈட்டியோடும், வாளோடும் வந்தார்கள்.
இயேசுவை நெருங்கிய யூதாசு, ‘ரபி வாழ்க’ என்று சொல்லி இயேசுவை முத்தமிட்டான்.
இயேசு அதிகபட்ச அன்புடன் அவனிடம், ‘தோழா எதற்காக வந்தாய்?’ என்றார்.
இயேசு ‘தோழா’ என்று தனிப்பட்ட முறையில் அழைத்த ஒரே சீடர் யூதாசு தான்!
இயேசு கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
யூதாசு இப்படியெல்லாம் நடக்கும் என எதிர்பார்த் திருக்கவில்லை.
ரோம ஆட்சியின் கீழ் இருக்கும் யூதேயாவில் மரணதண்டனை அளிக்கும் உரிமை இல்லை.
இயேசுவின் மரண தண்டனைக்காய் ரோம அரசையே துணைக்கு அழைப்பார்கள் என யூதாஸ் நினைக்கவில்லை.
இயேசுவை இதற்கு முன்பும் சிலமுறை பிடிக்கவும், கல்லால் எறிந்து கொல்லவும் எதிரிகள் முயன்றபோது அவர் தப்பிச் சென்றிருக்கிறார்.
அதே போல இப்போதும் தப்புவார் என நினைத்தான்.
ஆனால் இந்தமுறை இயேசு தப்பவில்லை. மனுக்குலத்தின் பாவங்களுக்காய் தன்னை பலியாக்கும் நேரம் வந்தது.
எனவே அமைதியாய் தன்னை அவர் அர்ப்பணித்தார்.
யூதாசு இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.
குருக்களிடம் ஓடிப் போய் தான் வாங்கிய முப்பது வெள்ளிக்காசை திரும்பக் கொடுத்து இயேசுவை மீட்க முயல்கிறான்.
நடக்கவில்லை. குற்ற உணர்வு குத்தியது. மன்னிப்பு வேண்டி இயேசுவிடம் ஓடாமல் தற்கொலை செய்து அழிந்து போனான்.
யூதாசின் வாழ்க்கை நமக்கு பத்து விஷயங்களைப் போதிக்கிறது.
1. இயேசுவின் போதனைகளைக் கேட்பதோ, அற்புதங்களைப் பார்ப்பதோ ஒரு மனிதனை நல்லவனாய் மாற்றாது.
இயேசுவோடு யூதாஸ் தொடர்ந்து நடந்தான், ஆனாலும் பாவியானான்.
2. பண ஆசை ஒருவனை அழிவுக்கு இட்டுச் செல்லும். யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டான்.
அழியாத விண்ணக வாழ்வை இழந்தான்.
3. இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் மீட்படைவதில்லை.
இயேசு யூதாசை அழைத்தார். யூதாசோ வாய்ப்பை இழந்தான்.
4. பணி செய்பவர்களின் கூட்டத்தில் இருப்பதால் மீட்பு வராது. சீடர்களின் பணியிலும், இயேசுவின் பணியிலும் கூடவே நடந்தான் யூதாஸ். என்ன பயன்?
5. வரங்கள் ஒருவனை மீட்படைய வைக்காது.
திரு முழுக்கு அளிக்க, பேயோட்ட, நோய்களை குணமாக்க என அனைத்து அதிகாரங்களையும் யூதாசுக்கும் கொடுத்தார் இயேசு. ஆனால், யூதாசோ வழிவிலகினான்.
6. கிறிஸ்தவப் பதவிகள் மீட்பைத் தராது.
சீடர்களிலேயே நிர்வாகத் திறமையுடைய யூதாஸ் பொருளாளராய் இருந்தார். அது அவரைக் காப்பாற்றவில்லை.
7. இதயத்தால் நெருங்காவிடில் பயனில்லை.
இயேசுவுக்கு நெருக்கமாய் இருந்தாலும், இதயத்தால் தொலைவில் இருந்தான் யூதாசு. இயேசுவோடு பந்தியமர்ந்தான், ஒரே பாத்திரத்தில் கை போட்டுச் சாப்பிட்டான். ஆனாலும் செடியில் கிளையாய் இணையவில்லை.
8. எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் மீட்பு வராது.
‘உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்’ என்றும் ‘அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு’ என்றும் இயேசு எச்சரித்திருந்தார். யூதாசு செவிசாய்க்கவில்லை.
9. திருமுழுக்கு ஒருவனை மீட்காது.
திருமுழுக்கு யோவானிடம் தன்னை இணைத்துக் கொண்டவர் தான் யூதாசு. அது அவனைக் காக்கவில்லை.
10. மக்களிடையே நன்மதிப்பு பெற்றிருப்பது உதவாது.
யூதாஸ் சீடர்களிடையே நல்லமதிப்பு பெற்றிருந்தான். சீடர்கள் யாரும் அவனை சந்தேகப்படாத அளவுக்கு அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்தான். விண்ணக வாழ்வை இழந்தான்.
இந்த பத்து சிந்தனைகளையும் மனதில் கொள்வோம், தூய வாழ்க்கை வாழ முடிவெடுப்போம்
Comments
Post a Comment