என் நுகம் மெதுவாயும்....

ஆடு மேய்ப்பவர் ஒருவர் இருந்தார் . அவரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. தினமும் அவைகளைப் புல்வெளிகளில் மேயவிட்டு , நீர் நிலைகளில் தண்ணீர் பருகச் செய்து, மாலை வேலைகளில் தொழுவத்தில் பாதுகாப்பாக அடைத்து வைப்பார் .
               அவர் முன்னே நடக்க ஆடுகள் எல்லாம் அவர் பின்னே நடக்கும் . அவரின் சத்தம் கேட்கும் எல்லைக்குள்ளாகவே அவை மேய்ந்து கொண்டிருக்கும் .
                 அவரிடம் இருந்த ஒரு ஆட்டுக்கு இந்த வழக்கங்கள் சலித்துப் போக ஆரம்பித்தன.  காட்டில் எவ்வளவோ புல்வெளிகள் இருந்தும் அவர் காட்டும் புல்வெளியில்தான் மேய வேண்டியிருந்தது. எவ்வளவோ நீர்நிலைகள் இருந்தும் அவர் காட்டும் நீர்நிலையில்தான் பருக வேண்டியிருந்தது. சில நேரங்களில் பசியோடும் , தாகத்தோடும் கூட , அவர் மேய்ச்சலுக்கு இடம் காட்டும் வரை அவர் பின்னாலேயே நடந்து போகவேண்டும் .
                அந்த ஆடு நினைத்தது ,
" எவ்வளவோ அருமையான நீர்நிலைகளும் , பசும் புல்வெளிகளும் , மாலையில் தங்கிக்கொள்ள நல்ல மறைவிடங்களும் இருக்கும் இந்த செழிப்பான காட்டில் நாம் ஏன் அடிமை போலக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் . நினைக்கும் போதெல்லாம் தண்ணீர் . பசி வந்த உடனே மேய்ச்சல் . இதுதான் இனி நம் கொள்கை . மற்ற முட்டாள் ஆடுகள் வேண்டுமென்றால் அடிமை வாழ்வு வாழ்ந்து கொள்ளட்டும் " .
                 ஆட்டின் சிந்தனை அதைத் தூங்கவிடவில்லை. மறுநாளே அதன் திட்டத்தை செயல்படுத்தியது. மறுநாள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் மெதுவாக ஒவ்வொரு அடியாய்ப் பின்வாங்கியது . இப்படியே முழு மந்தையும் முன்னே செல்ல விட்டுவிட்டு ஒரு மரத்தின் பின்பாகப் பதுங்கிக் கொண்டது. ஆடுகளெல்லாம் கடந்து மறையும் வரை காத்திருந்துவிட்டு
சந்தோஷமாய் வெளியே வந்தது.
               " மேய்ப்பரின்
அடக்குமுறையில்லை , உண்ணவும் பருகவும் கட்டுப்பாடில்லை , கூட்டத்தோடு கூட்டமாய் அடைபட்டிருக்கத் தேவையில்லை . எப்போதும் எதையும் செய்யலாம் . விடுதலை விடுதலை " ஆடு உற்சாகமாய்ப் பாடியது . எங்கெங்கோ ஓடியது. குதித்தது. எல்லையில்லாத உற்சாகத்தில் மிதந்தது .
               கொஞ்ச தூரத்தில் உயரமான புற்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தது. அந்தப்புற்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. இதுவரை மேய்ப்பன் ஒரு முறை கூட அதில் மேயவிட்டதே இல்லை .
ஆசையாய் ஓடி மேய ஆரம்பித்தது .
                புதிய புல்லின் சுவையில் அது மெய்மறந்து மேய்ந்து கொண்டிருக்கும்போது   தீடீரென்று புற்களின் மறைவிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட்டு ஆட்டின் மேல் பாய்ந்து அதன் முதுகுப் பக்கத்தை அழுத்தமாய்க் கவ்வியது. இதுபோன்ற ஆபத்தை இதுவரை ஆடு சந்தித்ததேயில்லை. வலியிலும் , மரண பயத்திலும் ஆடு அலறித்துடித்து , ஓநாயின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றது .
                  அப்போது எதிர்பாராத விதமாய் ஒரு மலைப்பாம்பு , புற்களிலிருந்து வெளிப்பட்டு ஓநாயை இறுக்கிக் கொண்டது . அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி . ஓநாய் தன்னுடைய மரணப் போராட்டத்தில் ஆட்டை  விட்டுவிட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆடு அந்த இடம் விட்டு ஓடிப்போனது .
              முதுகில் பலமாய்க் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. சொல்ல முடியாத அளவு வலி. தொண்டை வறண்டு போனது. தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா என்று அதன் கண்கள் தேடின . தூரத்தில் ஒரு ஓடை தென்பட்டது . நடுக்கத்துடனும் ,வலியுடனும் அந்த ஓடையை நோக்கி ஓடியது.
               தண்ணீரைப் பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியானது. வேகமாய் நெருங்கி நீரைப் பருக ஆரம்பித்தது. குளிர்ந்த தண்ணீர் தொண்டையில் இறங்குவது என்னவொரு நிம்மதி ? பட்ட துன்பங்களையெல்லாம் கொஞ்சம் மறந்தது. எல்லாமே ஓரிரு
நொடிகள்தான் . தண்ணீரிலிருந்து ஒரு முதலை பாய்ந்து வெளிப்பட்டு ஆட்டின் பின்னங் காலைக் கவ்வியது. அதன் கூரிய பற்கள் அழுத்தியதில் காலில் வலியும் , ரத்தமும் பெருக்கெடுத்தன .
                 " ஐயோ . இங்கும் ஆபத்தா ?" . ஆடு தன் முழு பலத்தையும் திரட்டிப் போராடியது. இன்னொரு காலை பலமாக உதைத்ததில் அந்த உதை சரியாக முதலையில் கண்ணில் விழுந்தது. முதலை கொஞ்சம் தடுமாறிப் பிடியை விடுவித்தது . தப்பிப் பிழைத்த ஆடு , ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியது.
                " ஒரே நாளில் எத்தனை ஆபத்துகள் ? எஜமானுக்குப் பின் செல்கையில் இதெல்லாம் என்னவென்று கூடத் தெரியாதே! நான் எதை அடிமைத்தனம் என்று நினைத்திருந்தேனோ அதுதான் இதுவரை என்னைப் பாதுகாத்து வந்திருக்கிறது . எஜமான் நம்மை இடம் பார்த்து மேய்த்தது இதற்காகத்தான் போலும் " கதறி  அழுதபடி ஓடியது .
              எஜமானரை நினைத்துக் கண்ணீர் பெருகியது.
" எஜமான் தம்முடைய கோலால்  வேண்டுமானாலும் என்னை நன்றாக அடிக்கட்டும் . நான் இனி அவரை விட்டுப் பிரியவே மாட்டேன் " என்று எண்ணியபோது , எஜமானின் குரல் அதன் காதில் தேனாய் விழுந்தது. தூரத்தில் அவர் ஆட்டின் கதறலைக் கேட்டு ஓடிவந்து கொண்டிருந்தார்.
             " என்னை நல்லா அடிங்க எஜமானே. புத்தி வர்ர வரைக்கும்
அடிங்க " ஆடு மனதுக்குள் புலம்பியது . மேய்ப்பர் அருகில் வந்து விட்டார் . ஆனால் அவரது முகத்தில் கோபமில்லை . கண்களில் கண்ணீர் ,
" இப்படி காயம் பட்டு வந்துருக்கியே செல்லம் . இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாதே " . அவர் வேறு எதுவுமே சொல்லவில்லை . ஆட்டைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார் . அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அதன் நெற்றியில் தெறித்தது.
எவ்வளவோ வழிகளை நாம் நமக்காக உண்டு பண்ணிக் கொள்ளலாம் . அது நம் பார்வைக்கு நலமானதாகவும் தோன்றலாம் . ஆனால் அதன் முடிவு ? அவரது வழிநடத்துதலே இன்பம் . அவர் குரல் கேட்கும் எல்லைக்குள் குடியிருப்பதே ஜீவன். அது நுகமல்ல , சுகம்.
   " என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது "
மத்தேயு 11 : 30
whatsapp....

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*