Mom
“...கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும்,.. இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” - 2கொரி.12:10
விளையாடும்போது ஒரு சிறுபிள்ளைக்கு அடிபட்டு விடுகிறது. உடனே அது அழுது கொண்டு தன் தாயிடம் ஓடி வருகிறது. “அம்மா இங்கே அடிபட்டு விட்டது” என்று காலை காட்டுகிறது. அம்மாவும் அடிபட்ட இடத்தை தடவி விட்டு, தன் சேலை முந்தானையால் பிள்ளையின் கண்ணீரை துடைத்துவிடுகிறார். உடனே எல்லாம் சரியாகி விட்டதாக நினைத்து குழந்தை மறுபடியும் விளையாட ஓடி விடுகிறது.
தாயின் இந்த அன்பான செயல் ஒன்றே அக்குழந்தைக்கு போதுமானது. ஆனால் பெரியவர்களாகிய நம்முடைய காயங்களை குணப்படுத்துவதற்கு அதைவிட மேலான ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அவ்வேளையில் வலிகளுக்கு என் மருந்து எங்கே? துன்பங்களுக்கு முடிவு எப்போது? என்று மனம் அங்கலாய்க்கிறது. ஆனால் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும் “தாயின் அரவணைப்பு” போல சுலபமான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது.
போட்டியில் விளையாடும் வீரர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெற்றி பெறுவதற்காக உடலை எவ்வளவோ வருத்திக்கொள்கிறார்கள்; ஒரு குழந்தையை பிரசவிக்க ஒரு தாய் மிகவும் வேதனைப்படுகிறாள்; தான் நேசிக்கும் குடும்பத்திற்காக குடும்பத்தலைவன் நீண்ட நேரம் கடினமாக உழைக்கிறான். இருப்பினும் இவர்கள் படும் கஷ்டத்திற்கெல்லாம் அர்த்தம் இருக்கிறது. ஆனால் காரணமின்றி துன்பப்படும்போது நமது இருதயத்தின் வேதனை அதிகமாகிறது.
இப்பகுதியை வாசிக்கும் அத்தனைபேரும் ஏதோ ஒரு வகையில் காயத்தின் வலியை அனுபவித்திருப்போம். வாழ்வின் கோர சம்பவங்கள் நம்மை உருக்குலைய வைத்திருக்கலாம். அகால மரணங்கள், குணப்படுத்த முடியாத வியாதிகள், காரணமற்ற துன்பங்கள் என நாம் அநேக இன்னல்களை அனுபவித்திருக்கலாம். ஒரு மனிதனின் இத்தகைய துன்பங்களுக்கு மற்றொரு மனிதன் மன சமாதானத்தையும் விடுதலையையும் தர முடியாது. ஆனால் சுக்குநூறாய் உடைபட்ட இருதயத்தையும் காயம்கட்டி ஆற்றிட ஒருவர் உண்டு. ஆம், நம் காயங்களை ஆற்றுபவர் கர்த்தர் ஒருவரே! எந்த வியாதிக்கும் அவரிடம் மருந்துண்டு. அவரால் ஆறுதல்படுத்த முடியாத துயரமென்று இவ்வுலகில் ஏதுமில்லை.
தேவபிள்ளையே! ஏன் கலங்குகிறீர்கள்! கண்கள் இரண்டும் புனலாக, நெஞ்சம் அனலாக, மண்டியிடுங்கள் திருமறை முன்பாக! அங்கே உங்கள் காயங்களுக்கு மருந்தையும், ஆறுதலையும், விடுதலையையும் பெற்றுக்கொள்வீர்கள்.
Comments
Post a Comment