நாயும் செல்வந்தனும்

இன்றைய தியானம் 19-05-2017

“காற்றானது... இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்...” – யோவான் 3:8

மேலைநாடு ஒன்றில் எட்வர்டு என்ற செல்வந்தன் இருந்தான்.  அவன் “டர்க்” என்ற ஒரு செல்ல நாயை வளர்த்து வந்தான்.  ஒருநாள் ஓர் அவசர காரியமாக பக்கத்து ஊருக்குத் தனது குதிரை மீது பயணமானான்.  அவனுடைய நாயும் அவனைப் பின் தொடர்ந்தது.  அதிகத் தூரக் களைப்பினால் ஒரு மரத்தையும், குளத்தையும் கண்டு அங்கே தான் கொண்டுவந்த ரொட்டி முதலானவைகளை உண்டு சற்று உறங்கிவிட்டு குளத்தில் இருந்த நீரைப் பருகி பயணத்தைத் தொடர்ந்தனர்.

புறப்படும்போது மரத்தின் வேரருகே வைக்கப்பட்டிருந்த பணப்பையை மட்டும் மறந்து விட்டு மற்ற அனைத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.  ஆனால் அந்த நாய் குதிரையையும், எஜமானனையும் சற்றுப் பின் தொடர்ந்து குரைத்தது.  எஜமான் குதிரையை நிறுத்தவில்லை.  உடனே நாய் குதிரையை முந்திச் சென்று குதிரையைத் தடுத்துப் பார்த்தது பயனில்லை.  உடனே குதிரையின் முன்னங்கால்களின் நடுவே வீழ்ந்து குதிரையையும், எஜமானனையும் விழ வைத்தது.  கோபமடைந்த எஜமான் எட்வர்டு தனது கைத்துப்பாக்கியை எடுத்து நாயைச் சுடவே, அது அடிபட்டு காயத்துடன் திரும்பி வேகமாக ஓடி அந்த மரத்தின் வேரருகே கிடந்த தன் எஜமானின் பணப்பையின் மீது வீழ்ந்து உயிர்விட்டது.  வெகு நேரத்திற்குப் பின் பணப்பை ஞாபகம் வந்த எஜமான் திரும்பி வந்து இறந்து கிடந்த தனது நாயையும் அதனடியில் இருந்த தனது பணப்பையையும் கண்டு தன் மதியீனத்தை எண்ணி வருந்தி அந்த நாய்க்கு ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினான்.

அருமையானவர்களே! அநேக நேரங்களில் நாமும் இப்படி நடந்து கொள்கிறோமல்லவா? எண்ணாகமம் 22ல் தீர்க்கதரிசியான பிலேயாமின் மதிகேட்டை பேசாத மிருகமான கழுதை தடுத்தது.  இதேப்போல புதிய ஏற்பாடுக் காலத்திலே பரிசுத்த ஆவியானவரே நம் ஒவ்வொருவரையும் வழி நடத்துகிறார்.  இன்றைய வேதபகுதியிலே பவுல் ஊழியத்தில் தடைபண்ணப்பட்டு ஆவியானவரால் போக அனுமதி மறுக்கப்பட்டு வேறு இடத்திற்கு நடத்தப்படுவதை காண்கிறோம்.  இப்படி வேதத்திலே அநேக சாட்சிகளைக் கூற முடியும்.  இந்த நாளிலும் ஆண்டவரின் சத்தம் கேட்டு, சித்தம் செய்வோரே அவரது தேவை! ஆவியின்படி நடத்தப்படுவோர் இருக்கும் இடத்திலே மனுஷீக எண்ணங்களும், முயற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தேவதிட்டமே நிறைவேறும்.  ஆம், ஆவியானவரின் வழிநடத்துதலையும், ஆலோசனையையும் அசட்டை செய்யாமல் செவி கொடுப்போருக்கு ஆசீர்வாதமும், வெற்றியும் கிடைப்பது நிச்சயமே!
- T.ஜேக்கப் ஜெயப்பிரகாஷ்

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics