நல்ல இராஜா

பெரிய சக்கரவர்த்தி ஒருவரின் ஆளுகையின் கீழ் பல நாடுகள் இருந்தன . எல்லா நாடுகளையும் சக்கரவர்த்தி எந்தக் குறையுமில்லாமல் ஆட்சி செய்து வந்தார்  . சில வேளைகளில் ஏதேனும் நாடுகளில் குறைவுகள் உண்டானால் , உடனடியாகத் தமது அதிகாரிகளை அனுப்பி அதை நிவர்த்தி செய்துவிடுவார் . இதனால் மக்களும் , சக்கவர்த்தி தங்கள் மேல் வைத்திருக்கிற அன்பை உணர்ந்துகொண்டு அவர்களும் அவரை உயிராக மதித்தார்கள் .
                   அவருடைய ராஜ்யத்தில் இருந்த ஒரு நாட்டில் ஒரு முறை கடுமையான பஞ்சம் வந்தது . பட்டினிச்சாவும் , பிணங்கள் பெருகுவதால் பரவிய மரணத்துக்கு ஏதுவான கொள்ளை நோயும் மக்களை வேதனைப் படுத்தின . ஓரிரு மாதங்களில் வரப்போகிற மழைக்காலத்தில் விதைப்பதற்கான விதை தானியத்தையும் அவர்கள் தங்களது கொடும் பஞ்சத்தால் சாப்பிட்டுத் தீர்த்துவிட்டதால் வருகிற வருடத்துக்கான உணவும் கேள்விக்குறியாகிவிட்டது .
                     இந்தக் கொடுமையான செய்தியைக் கேள்விப்பட்ட சக்கரவர்த்தி துடித்துப் போனார் . உடனடியாக மூன்று துடிப்பான அதிகாரிகளை இந்தக் காரியத்துக்காக நியமித்தார் . மூவரிடம் ஒவ்வொருவிதமான பொறுப்பை ஒப்படைத்தார் .
                      ஒருவனிடம் , அந்த நாட்டு மக்களின் சில மாதங்களுக்கான உணவு தானியங்களை சுமந்து வரும் குழுவின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் . இன்னொருவனின் பொறுப்பில் ஒரு மருத்துவக் குழுவையும் , மருந்துகளையும் ஒப்படைத்தார் . இன்னொருவனை விதை தானியங்களைக் கொண்டு செல்லும் குழுவுக்குத் தலைவனாக்கி மூன்று குழுக்களையும் அனுப்பி வைத்தார் .
                 முதல் குழுவின் தலைவன் போர் புரிவதில் வல்லவன் . நல்ல போர்ப் பயிற்சியாளன் . பொக்கிஷங்களைப் பாதுகாப்புடன் இடம் பெயர்ப்பதில் திறமையுள்ளவன் . இரண்டாவது குழுவின் தலைவன் ஒரு மருத்துவ நிபுணன் . அவனது குழுவில் இருந்த ஒவ்வொருவரும் மருத்துவத்துறையில் தேர்ந்தவர்கள் . மூன்றாவது குழுவின் தலைவனுக்கு விவசாயத்துறையிலும் , தானியத்தை சேமித்து வைக்கும் கிடங்குகளை நிர்மாணிப்பதிலும் , தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் , விவசாயம் தொடர்பான சகல ஆலோசனைகளையும் வழங்குவதிலும் நல்ல திறமையும் , அனுபவமும் இருந்தது . அவனது குழுவில் இருந்தவர்களும் விவசாய நிபுணர்கள் .
                  அவர்கள் அந்த நாட்டை அடைய இரண்டு நாட்கள் பிரயாணிக்க வேண்டும் . வழியில் அவர்களுக்கான உணவை சமைத்துக் கொடுப்பதற்காக சமையற்காரர்களும் அவர்களுடன் வந்திருந்தார்கள் . மதியம் வரை பயணம் செய்துவிட்டு அவர்கள் உணவுக்காக உட்கார்ந்தார்கள் . சிறிது நேரத்திலேயே உணவு தயாராகிவிட்டது .
                தலைமை சமையற்காரர் விளையாட்டாகச்  சொன்னார் ,
" மருத்துவர் குழுவை நல்லா கவனிச்சுக்குங்கப்பா . அவங்கதான் பாதையில்  நமக்கு ஒரு வயித்து வலி தலை வலின்னாலும் காப்பாத்தி வீட்டுல கொண்டு போய் சேப்பாங்க " .
              அவர் சாதாரணமாகத்தான் சொன்னார் . இருந்தாலும் இதைக் கேட்ட உணவு தானியக் குழுவின் தலைவனுக்குக் கோபம் வந்துவிட்டது .
" யோவ் . போற வழியில மட்டுமில்ல . எப்பவுமே வாளும் கையுமாத் திரிஞ்சு உங்கள பாதுகாக்குறது நாங்கதான் . இப்ப திடீர் எவனாவது வந்து தாக்குதல் நடத்தினா நாங்கதான் உயிரைக் குடுத்து காப்பாத்தணும் . தெரிஞ்சுக்க " என்றான் சூடாக .
                சமையல்காரர் பயந்து விட்டார் .
" சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் . பெருசா எடுத்துக்காதிங்க " . இதைக் கேட்ட மருத்துவர் குழுவின் தலைவன் கொதித்துப் போனான் .
" சமையக்காரர் சொன்னதுல என்ன தப்பு ? மருத்துவர் உதவி இல்லாம வாழ்ந்துடுவிங்களா ? போர்ல நீங்க காயப்பட்டுக் கிடக்கும்போது பிணங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு ஆளா உயிர் இருக்குதா , இல்லையான்னு தேடித் தூக்கிட்டுவந்து
வைத்தியம் பாத்து காப்பாத்துறது நாங்கதான் . எங்கள விட முக்கியமானவங்க யாரு இருக்காங்க ? "
                   இத்தனை நேரமும் பேசாமல் இருந்த விவசாயக் குழுத் தலைவன் கத்த ஆரம்பித்தான் .
" என்னமோ நீங்க ரெண்டு பேருந்தான் நாட்டுக்கு முக்கியமானவங்க , மத்தவங்க எல்லாம் பாரமானவங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க பேசுறது . நாங்க சோறு போடலைன்னா இங்க ஒருத்தருமே இருக்க முடியாது " .
                  விவாதம் முடிவில்லாமல் தொடர்ந்தது . போர்ப் படைத்தலைவன் சொன்னான் ,
" நீங்கதான் முக்கியமான ஆளுங்கன்னா நீங்களே முதல்ல போங்க . எங்க பாதுகாப்பு உங்களுக்குத்
தேவைப்படாது " அந்தக் குழு உட்கார்ந்து விட்டது .
                   மருத்துவக் குழுவின் தலைவனும் விடவில்லை ,
" மத்தவங்களே முன்னாடி போகட்டும் . வழியில பாம்பு , கீம்பு கடிச்சா அவங்களே வைத்தியம் பாத்துக்குவாங்க " அந்தக் குழுவும் உட்கார்ந்தது .
                 " நாம மட்டும் என்ன ஏப்பை சாப்பையா ? நம்மாளுகளும் முன்னால போக வேண்டாம் " . விதை தானியக் குழுவும் உட்கார்ந்து விட்டது .
               இரண்டு நாட்களாகியும் யாரும் பாதிப்புக்குள்ளான நாட்டுக்குப் போய்ச் சேரவில்லை . பட்டினிச்சாவும் , வியாதியும் , தற்கொலைகளும் பெருகின . அந்த நாட்டிலிருந்த ஒருவன் குற்றுயிரும் குலையுயிருமாய் ஓடி வந்து சக்கவர்த்தியிடம் நிலையைச் சொல்லி அழுதான் .
                 சக்கரவர்த்தி திடுக்கிட்டார் .
" நான் நிவாரணக் குழுவை அனுப்பி இரண்டு நாட்களாகி விட்டனவே ? இந்நேரம் அவர்கள் அங்கே வந்திருக்க வேண்டுமே ?  என்னவாயிற்று இவர்களுக்கு ? " . தாமே சில வீரர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் .
                   பாதி வழி செல்வதற்குள்ளாகவே , தான் அவசரமாய் அனுப்பிய நிவாரணக்குழுக்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார் . அவரைக் கண்டதும் ஒவ்வொரு குழுவின் தலைவனும் மற்றவர்கள் மீதுள்ள குறையை அவரிடம் சொன்னார்கள் .
                 சக்கரவர்த்தி கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார் .
" முட்டாள்களே , செத்து மடிந்து கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற அல்லவா உங்களைத் தேர்ந்தெடுத்து , ஏராளமான பொருட்களையும் கொடுத்து அனுப்பினேன் ? நீங்களோ உங்களில் எவன் பெரியவன் என்ற சண்டையில் , வந்த முக்கியமான பொறுப்பையே மறந்தீர்கள் . நீங்கள் உங்கள்சொந்த சண்டையில் ,  பாவம் உங்கள் உதவிக்காகக் காத்திருக்கும் பலரின் உயிரை அலட்சியப்படுத்துகிறீர்கள் . கடமை மறந்த உங்களுக்குத் தகுந்த இடம் சிறைச்சாலைதான் "
என்று சொல்லி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் .
                ஒவ்வொரு குழுவிலிருந்தும் வெவ்வேறு ஆட்களைத் தெரிவு செய்து அவர்கள் தலைமையில் நிவாரணக் குழுவை அனுப்பி வைத்தார் .

செல்லமே !
நாம் சுமந்து செல்வது முக்கியமான பொறுப்புகளை அல்லவா ?
நம்முடைய மேட்டிமையால் மற்றவரை மட்டந்தட்டி நாமும் செயல்படாமல் , அவர்களையும் செயல்படவிடாமல் எத்தனையோ பேருக்குப் போய்ச் சேர வேண்டிய நன்மைகளைக் கெடுக்கிறோம் !

" உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி. உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்கு சமானம் "

யோபு 13 :12

எஜமானுக்கு உகந்த நல்ல ஸ்தானாதிபதியாக செயல்படும்போது நமக்கும் நன்மை , பிறருக்கும் நன்மை .
நம்மை அனுப்பினவருக்கும் பெருமை அல்லவா ?

" கோடைகாலத்தில் உறைந்த மழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உன்னதமான ஸ்தானாதிபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்: அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான் " .

நீதிமொழிகள் 25 :13

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics